பெண் சிசுக்கொலை நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் கலெக்டர் பேச்சு

பெண் சிசுக்கொலை நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டத்தில் பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.

Update: 2018-07-12 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். மருதராஜா எம்.பி., ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசியதாவது:-

எடை குறைவான குழந்தைகளுக்கும், கடுமையான எடை குறைவு உள்ள குழந்தைகளுக்கும் மாற்று உணவு வகைகள், இணை உணவுடன் தானியங்கள், பயறு வகைகள் வழங்கப்பட வேண்டும். மேலும் தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும்பொழுது அவர்களின் எடை சுமார் 10 கிலோ வரை கூட வேண்டும். இதன் மூலமாக மட்டுமே ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். மேலும், சரியான எடையுள்ள குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு, தாய் நல்ல ஊட்டச்சத்து நிலையிலும் சரியான திருமண வயதிலும் இருக்க வேண்டும். இளம் வயது திருமணம் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

பெண் சிசுக்கொலை நடைபெறுவதை தடுக்க வேண்டும். மேலும் குழந்தை பரிசோதனை செய்யும் ஸ்கேன் சென்டர்களை கண்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் தாய்மார்களுக்கு தகவல் தொடர்பு கல்வி அளித்து அவர்கள் மனநிலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த தகவல் தொடர்பு கல்வியை பள்ளி குழந்தைகள் அளவில் இருந்தே தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இது குறித்து சுவர் விளம்பரங்களை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் அங்கன்வாடி மையங்களில் கட்டிட வசதி, கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்டவைகளை மேம்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக அனைத்து மையங்களிலும் பயிலும் குழந்தைகளின் நலன் கருதி கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சம்பத், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் திட்ட அலுவலர் பூங்கொடி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்