மருத்துவரை மாற்றினால்... அபாயம்!

மருத்துவரை அடிக்கடி மாற்றினால் மரண அபாயம் வரை நேரலாம் என்று எச்சரிக்கிறது ஓர் ஆய்வு.

Update: 2018-07-13 21:30 GMT
ரே மருத்துவரிடம் தொடர்ந்து சென்று சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளிள் இறப்பு விகிதம் மிகவும் குறைவு என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இவ்வாறு செய்வதால் கிடைக்கும் நன்மைகள், பொது மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்குப் பொருந்தும்.

இந்த நன்மைகள் வேறுபட்ட கலாச்சாரம் மற்றும் சுகாதார அமைப்புகளைச் சார்ந்த மக்களுக்கும் கிடைப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மருத்துவ நடைமுறையின் உயர்ந்த அம்சம், உயிரைக் காக்கும் சாத்தியம்தான். ஆனால் இது புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று எக்ெஸட்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நோயாளிகள் தங்கள் சொந்த மருத்துவரைப் பார்ப்பதே மதிப்புமிக்கது என்பதை இந்த ஆய்வின் மூலம் உணர்ந்துள்ளதாக முன்னோடிப் பொது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக பணிச்சுமை அழுத்தங்களால் ஒரு குறிப்பிட்ட மருத்துவரைப் பார்ப்பதற்கு அதிக காலம் காத்திருக்க நேரலாம் என்று பொதுமருத்துவர்களுக்கான ராயல் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

தீவிர நோய், நீண்டகால மனநலப் பிரச்சினைகள் மற்றும் சிக்கலான மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மருத்துவக் கண்காணிப்பும் பராமரிப்பும் தொடர்ச்சியாக ஒரே மருத்துவர் மூலம் வழங்கப்படுவது சிறந்த பயனளிக்கும்.

மருத்துவ இதழ் ஒன்றில் வெளியான இந்த ஆய்வு, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 9 நாடுகளில் இருந்து 22 ஆய்வு முடிவுகளைப் பகுப்பாய்வு செய்துள்ளது.

பிற நோயாளிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த ஆய்வுக் காலத்தில், சராசரியாக இரண்டாண்டுகள் ஒரே மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தவர்களிடம் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

மருத்துவப் பராமரிப்பு தொடர்ந்து ஒரே மருத்துவரால் கொடுக்கப்படுவது சிறந்தது என்றும், இதற்கு சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளும், மருத்துவரும் அடிக்கடி சந்தித்து, ஒருவரையொருவர் அதிகமாக அறிந்துகொள்ளும்போதுதான் தொடர்ச்சியான மருத்துவப் பராமரிப்பு கிடைக்கிறது என்று எக்ஸெட்டர் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் பிலிப் இவான்ஸ் கூறியிருக்கிறார்.

‘‘இந்த நடைமுறை, சிறந்த தகவல் தொடர்பை உருவாக்குவதற்கும், நோயாளிகளுக்கு திருப்தி அளிப்பதற்கும், மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவதற்கு அவர்களை வழிநடத்துவதற்கும், மிக முக்கியமாக மருத்துவமனை சேவைகளை குறைத்துவிடவும் பயன்படுகிறது’’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்த ஆய்வில் ஈடுபட்டவரும், எக்ஸெட்டரில் உள்ள செயின்ட் லியோனார்டு பிரிவு பொது மருத்துவருமான சர் டெனிஸ் பெரேரா கிரே, எந்த மருத்துவரைச் சந்திக்கிறோம், அவர்களோடு எவ்வளவு சிறந்த முறையில் நோய் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்கிறோம் என்பது நோயாளிகள் நீண்டகாலமாக அறிந்திருக்கும் விஷயம் என்று கூறியுள்ளார்.

‘‘இதுவரை, நோயாளிகள் அவர்களுக்கு விருப்பமான மருத்துவரைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்வது வசதியான அல்லது மரியாதைக்குரிய விஷயமாக உள்ளது’’ என்கிறார் அவர்.

தரமான மருத்துவப் பராமரிப்பு எது என்பதும், இதுவே உண்மையிலேயே வாழ்வா, சாவா என்ற விஷயம் என்பதும் இந்த ஆய்வில் தெளிவாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

பல அணுகுமுறைகளைக் கையாளும் பல சிகிச்சை முறைகள் சோதித்துப் பார்க்கப்படுவதாக ராயல் மருத்துவக் கல்லூரியின் துணைத் தலைவர் பேராசிரியர் கமிலா கவுத்துரோன் கூறியுள்ளார்.

நோயாளிகளின் பதிவேடுகளைப் பார்க்கும், அவர்களோடு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு பொது மருத்துவர் உள்ளிட்ட, சுகாதார பராமரிப்பு நிபுணர்கள் குழு ஒன்றிடம் நோயாளி ஒப்படைக்கப்படுவது அவற்றில் ஓர் அணுகுமுறை ஆகும்.

பொது மருத்துவ சேவைகளை சரியான நேரத்தில் சமச்சீராக தொடர்ச்சியாக வழங்குவது பெரும் சவாலாக உள்ளது. அதிக பொது மருத்துவர்கள் நியமனமும், கூடுதல் மனித வளமும்தான் கடைசியில் இதற்கான தீர்வாக அமையும் என்று கமிலா கூறுகிறார். 

மேலும் செய்திகள்