திருப்பத்தூரில் ஆசிரியரின் தாயாரை ஏமாற்றி நூதன முறையில் 15 பவுன் நகை அபேஸ்

திருப்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த ஆசிரியரின் தாயாரை ஏமாற்றி நூதன முறையில் 15 பவுன் நகையை அபேஸ் செய்து கொண்டு தப்பி ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-07-11 22:00 GMT
திருப்பத்தூர்,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பத்தூரில் உள்ள சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 42), மூக்கனூர் புதூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோதை. அச்சமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று விஸ்வநாதனின் தாயார் ராஜகுமாரி (70) மட்டும் வீட்டில் தனியாக இருந் துள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், விஸ்வநாதனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த ராஜ குமாரியிடம், விஸ்வ நாதனிடம் நான் ரூ.1 லட்சம் கடன் வாங்கி உள்ளேன். அந்த பணத்தை திருப்பி தர வந்துள்ளேன். இதற்காக பாண்டு பத்திரம் எழுதி கொடுத்துள்ளேன் எனவும் அந்த பாண்டு பத்திரத்தை கொடுத்தால் ரூ.1 லட்சம் தருவதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு ராஜகுமாரி பாண்டு பத்திரம் எங்கே உள்ளது என கேட்டுள்ளார். அந்த பெண், பத்திரம் பீரோவில் உள்ளதாக உங்களுடைய மகன் தெரிவித்தார். எனவே, வாருங் கள் பீரோவில் பார்க்கலாம் என கூறி வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். பின்னர் பீரோவில் பத்திரத்தை தேடுவது போல் பாவனை செய்த அந்த பெண், ராஜகுமாரியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

இதனையடுத்து ராஜகுமாரி தண்ணீர் எடுத்து வருவதற்குள் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை அந்த பெண் அபேஸ் செய்து கொண்டு, பாண்டு பத்திரம் எதுவும் இல்லை எனவும் உங்களுடைய மகன் வந்தவுடன் பத்திரத்தை வாங்கிக் கொண்டு பணத்தை தந்துவிடுவதாக கூறி அங் கிருந்து சென்று விட்டார்.

பின்னர் சந்தேகமடைந்த ராஜகுமாரி உள்ளே சென்று பீரோவை பார்த்த போது பீரோவில் இருந்த நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விஸ்வநாதன் திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்