வடபழனியில் தனியார் கம்பெனியில் போலி ரசீது கொடுத்து ரூ.12 லட்சம் மோசடி 2 பேர் கைது

வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில், பணம் செலுத்தியது போல் போலி ரசீது கொடுத்து ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-11 23:00 GMT
பூந்தமல்லி,

நாமக்கல்லில் தனியாருக்கு சொந்தமான கம்பெனி உள்ளது. அதன் கிளை நிறுவனம், சென்னை வடபழனியில் செயல்பட்டு வருகிறது. இங்கு விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், தாங்கள் விருப்பப்பட்ட தொகையை முதலீடு செய்வார்கள்.

அந்த முதலீட்டை வைத்து அந்த நிறுவனம் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யும். அதில் வரும் லாபத்தை, முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல், அவர்கள் விரும்பும் நேரத்தில் அவர்கள் செலுத்திய தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

இந்த நிறுவனத்தில் பணம் செலுத்துபவர்கள் ஆன்-லைன் மற்றும் வங்கி கணக்கு மூலமாக செலுத்துவார்கள். அதற்கான ரசீதை ‘வாட்ஸ்அப்’ அல்லது இமெயில் மூலம் அந்த நிறுவனத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.

இந்த நிலையில் புதிய வாடிக்கையாளர்களாக அறிமுகம் ஆன நாகரத்தினம், லாசர் ஆகிய 2 பேரும் இந்த கம்பெனியில் ஆன்-லைன் மூலம் பணம் முதலீடு செய்து உள்ளதாக ரசீது அனுப்பி உள்ளனர்.

பின்னர் சில மாதங்கள் கழித்து அவர்கள் இருவரும் சேர்ந்து தாங்கள் செலுத்தியதாக கூறி ரூ.12 லட்சத்து 40 ஆயிரத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து அந்த தனியார் நிறுவனம், தங்கள் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது இருவரும் வங்கியில் பணம் செலுத்தாமலேயே, பணம் செலுத்தியது போல் போலியான ரசீது கொடுத்து, நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


இது குறித்து அந்த கம்பெனியின் மேலாளர் சசிகலா அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இருவரும் வங்கி கணக்கில் பணம் செலுத்தாமலேயே பணம் செலுத்தியதாக போலியான ரசீது கொடுத்து, பண மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் இருவரும் இதுபோல் வேறு எங்காவது மோசடி செய்து உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்