யானையை பிடிக்க வனத்துறையினர் தாமதிப்பதால் விவசாயிகள் அச்சம்

தேவாரத்தில் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தாமதப்படுத்துவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2018-07-10 22:30 GMT
தேவாரம்,


உத்தமபாளையம் வனச்சரகம் தேவாரம், பண்ணைப்புரம் வனப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒற்றை காட்டுயானை அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தேவாரம் பகுதியில் உள்ள பெரும்புவெட்டி, 18-ம் படி, தாலைஊற்று உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை விவசாயிகள் உள்பட 7 பேரை அந்த யானை கொன்றுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணைப்புரம் வெள்ளப்பாறை பகுதியில் தோட்ட காவலுக்கு இருந்த பெரிய குருசாமி என்பவரை இந்த யானை தாக்கியது. இதில் படுகாயத்துடன் அவர் உயிர் தப்பினார். இந்த நிலையில் யானையின் நடவடிக்கைகளை கண்டறிந்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் 5 பேர் கடந்த 25 நாட்களுக்கு முன்பு தேவாரம் வனப்பகுதிக்கு வந்தனர்.

அந்த ஒற்றை யானையை பிடிப்பதற்கு முன்னோட்டமாக அதன் வழித்தடங்களை கண்டறியும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டனர். அதன்படி யானை செல்லும் இடங்கள் குறித்து வரைபடத்துடன் மாநில வன உயிரின பாதுகாவலருக்கு அனுப்பியுள்ளனர். யானையை பிடிப்பதற்கு இன்னும் அனுமதி கிடைக்காததால் அடுத்து கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.

இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களாக அந்த யானை, விளைநிலங்களுக்குள் புகுந்து மரவள்ளிக்கிழங்கு, தென்னை மரங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி செல்கிறது. நேற்று தேவாரத்தை சேர்ந்த மணி என்பவரது தோட்டத்தில் யானை புகுந்து 20 தென்னை மரங்களை நாசம் செய்துவிட்டு சென்றது. காட்டுயானையின் தொடர் அட்டகாசத்தால் வனத்துறையினர் மீது விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

யானையை பிடிக்க முதல்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். யானையை கண்காணிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால் அதிகாலையில் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, மரவள்ளிக்கிழங்குகளை யானை நாசம் செய்வதை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

யானைக்கு பயந்து கொண்டு எத்தனை நாட்கள் தோட்டத்துக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கமுடியும். யானையை பிடித்து அப்புறப்படுத்தும் பணியில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளதால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். யானையை பிடிக்க இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று வனத்துறையினர் காரணம் கூறி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் யானையால் மீண்டும் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. அப்படி உயிர் பலி ஏற்பட்டால் வனத்துறையினர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்