8 வழி பசுமை சாலைக்காக மக்கள் மீது அரசு போர் தொடுக்கிறது த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
8 வழி பசுமை சாலைக்காக மக்கள் மீது அரசு போர் தொடுக்கிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
கருப்பூர்,
சேலம் மாவட்டம் ஓமலூரில் த.மா.கா. சார்பில் சேலம் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் விமான நிலைய விரிவாக்கம், 8 வழி பசுமை சாலை ஆகிய திட்டங்கள் சேலம் மாவட்ட மக்களை அச்சுறுத்தும் 2 பெரிய திட்டங்கள் ஆகும். எந்த திட்டத்திற்கும் 3 மாதங்கள் மக்கள் கருத்து கேட்பது அரசின் நடவடிக்கை. ஆனால் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் சட்ட விதிகளுக்கு புறம்பாக தமிழக அரசால் நிலம் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. சேலம் விமான நிலையம் 163 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலைய அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு அரசு அறிவித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.
மேலும் விரிவாக்கம் என்ற பெயரில் விவசாய நிலங்களை எடுப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போராடும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிக்க தேவையில்லை. தமிழக அரசு விமான நிலைய விரிவாக்கத்தை உடனடியாக கைவிட வேண்டும். அதற்காக பசுமை வாய்ந்த கிராமங்களை அழிக்கக்கூடாது. இந்த அரசு மக்களின் கவலைகளை கண்டுகொள்ளாத அரசாக உள்ளது.
மேலும் பசுமை வழிச்சாலை யாருக்கு? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சாலை திட்டம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 8 வழி சாலை தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் கனிம வளங்களை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லவே என்ற சந்தேகம் உள்ளது. இந்த சாலை திட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், 8 மலைகள், 6 ஆறுகள், லட்சக்கணக்கான மரங்களை அழித்து அமைக்கப்பட உள்ளது.
பசுமை வழி சாலை தாம்பரம் வரை தான் செல்ல முடியும். அதற்கு மேல் 30 கிலோ மீட்டர் போக்குவரத்து நெரிசலில் தான் செல்ல வேண்டும். இந்த சாலைக்காக மக்கள் மீது மாநில அரசு போர் தொடுத்து வருவது கண்டனத்துக்கு உரியது. 8 வழி சாலையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மக்களை பாதிக்காத மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும். விவசாயிகள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். இதற்காக த.மா.கா. தொடர்ந்து குரல் கொடுக்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய திட்டமான சேது சமுத்திர திட்டமே முடங்கியுள்ளது. அதை நிறைவேற்றினால் நமது நாடு பெரிய அளவில் முன்னேறும். அதை கிடப்பில் போட்டுவிட்டு மக்களை பாதிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவது மக்களை அரசே அழிக்கும் செயலாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கருத்துகளை அவர் கேட்டறிந்தார், தொடர்ந்து மாவட்ட தொழிற்சங்க தலைவர் சின்னையனின் பேரக்குழந்தைக்கு சஜீவ் என பெயர் சூட்டினார். இதில் மாநில பொது செயலாளர் குலோத்துங்கன், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா, மாநில செயலாளர்கள் வக்கீல் செல்வம், உலகநம்பி, மாவட்ட தலைவர்கள் சுசீந்திரகுமார், காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.