புதுச்சேரியில் குற்றங்கள் குறைந்துள்ளன சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தகவல்

புதுவையில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா கூறினார்.;

Update: 2018-07-08 22:45 GMT
புதுச்சேரி,

புதுவையில் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து பிரச்சினைகள் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, உயர்போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடசாமி, அப்துல்ரகீம், ரச்சனாசிங், குணசேகரன், பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் நடந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சூசைராஜ் என்பவர் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு மர்ம நபர்கள் சிலர் செல்போன் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் தோல் செருப்பினை அவருக்கு வழங்கினார்கள். அதை போலீசார் வாங்கி பார்த்தபோது செருப்பின் ஒரு பகுதியை பிய்த்து அதனுள் செல்போனை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சூசைராஜ் புதுவையின் பிரபல தாதாவான மர்டர் மணிகண்டனின் கூட்டாளி ஆவார். அவருக்கு கொடுப்பதற்காக இந்த செல்போன் எடுத்து செல்லப்பட்டதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறையில் இருந்து கைதிகள் கோர்ட்டுக்கு வரும்போது செல்போன் உள்ளிட்டவற்றை அவர்களுக்கு வழங்குவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுவையில் நடந்த மிகப்பெரிய திருட்டு சம்பவங்களில் தமிழகத்தை சேர்ந்த திருட்டு கும்பல் ஈடுபட்டுள்ளது. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

கடந்த ஏப்ரல், மே மாதங்களை ஒப்பிடும்போது இப்போது குற்றங்கள் குறைந்துள்ளன. இன்னும் குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா கூறினார். 

மேலும் செய்திகள்