தர்மபுரியில் வீடுகளில் கழிவுநீர் புகுந்ததால் நகராட்சி குப்பை வண்டியை சிறைபிடித்து குடியிருப்புவாசிகள் போராட்டம்
தர்மபுரியில் வீடுகளில் கழிவுநீர் புகுந்ததால் சுகாதார சீர்கேட்டில் சிக்கிய குடியிருப்புவாசிகள் நகராட்சி குப்பை வண்டியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி நகரில் உள்ள உழவர் சந்தையின் கிழக்குப்பகுதியில் டி.ஏ.எம்.எஸ். காலனி உள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக குப்பைகளை அகற்றும் பணி முறையாக நடைபெறவில்லை. இந்த நிலையில் இங்குள்ள தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் கடந்த சில வாரங்களாக தூர்வாரப்படவில்லை. இதனால் அங்கு தேங்கிய கழிவுநீர் சீராக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தேங்கியது. இதன்காரணமாக கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த நிலையில் நேற்று இந்த பகுதிக்கு குப்பைகள் அள்ளுவதற்காக வந்த நகராட்சி குப்பை வண்டியை சிறைபிடித்த குடியிருப்புவாசிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் அருகே உள்ள நிறுவனங்களில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த பகுதியில் உள்ள கால்வாய்களில் ஓடுகிறது. இந்த கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததாலும் அடிக்கடி கழிவுநீர் கால்வாயில் இருந்து வழிந்து இந்த பகுதியில் உள்ள சாலைகளிலும், வீடுகளுக்குள்ளும் புகுந்து நிற்பது வழக்கமாகி வருகிறது. இதேபோன்று பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் வீடுகளில் புகுந்து விடுவதால் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறோம்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பகுதியில் உள்ள கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றி சாக்கடை கால்வாய்களில் இருந்து கழிவுநீர் சீராக வெளியேற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பகுதியில் உள்ள நீர்வழி கால்வாயில் உள்ள அடைப்புகளை தூர்வார வேண்டும் வலியுறுத்தினார்கள்.