ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு ரூ.1 கோடி வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது
ஆதிதிராவிடர், பழங்குடியின இன மக்களுக்கு ரூ.1 கோடி வரையில் வங்கி கடன் வழங்கப்படுகிறது என்று தேசிய பட்டியலின ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய பட்டியலின ஆணையகத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கதிரவன் வரவேற்று பேசினார். இதில் அனைத்து துறை அலுவலர்களுடன் துறை ரீதியான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், மானியங்கள், நலத்திட்ட உதவிகள், உள்ளிட்டவை செயல்படு்த்தியுள்ளது குறித்து தேசிய பட்டியலின ஆணையத்தின் துணை தலைவர் முருகன் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, தாட்கோ, தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை, மற்றும் காவல் துறை ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொண்ட பணிகள், மற்றும் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், உஜ்வால திட்டம், ஜீவன் ஜோதி யோஜனா, அடல்பென் யோஜனா, முத்ரா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பட்டியலின ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள், ஒவ்வொரு துறை வாரியாக பயனடைந்த விவரங்களை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தேசிய பட்டியலின் ஆணைய துணை தலைவர் முருகன் பேசும்போது, பாரத பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதின் விவரம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் முழு அளவு பயனடைந்தவர்களின் எண்ணிக்கை, அதனால் பயடைந்த குடும்பங்கள் பற்றியும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு வழங்கும் திட்டத்தின் கீழ் பயடைந்த பயனாளிகளிடம் முகவர்கள் ஏதேனும் பணம் பெறுவது குறித்து புகார் வந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் திட்டங்கள், மாநில அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கிகள் மூலம் கடன் வழங்கும் இலக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதை வங்கிகள் அதிகப்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியின இன மக்களுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை எந்த வித உத்தரவாதம் இல்லாமல் வங்கி கடன் வழங்கப்படுகிறது. தொழில் முனைவோரை அடையாளம் கண்டு தொழிற்பயிற்சி வழங்கி கடனுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், மாவட்ட வன அலுவலர்கள் தீபக் பில்கி, பிரீத்தா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், உதவி கலெக்டர்கள் சரவணன், விமல்ராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், தாட்கோ மேலாளர் மீனாட்சி சுந்தரம், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.