விலங்குகளில் இருந்து பரவும் நோய்கள்-விழிப்புணர்வு தேவை

பன்நெடுங்காலமாகவே மனிதர்களின் வாழ்க்கை தாவரம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் சார்ந்தே அமைந்துள்ளது.

Update: 2018-07-06 05:16 GMT
விலங்குகள் மனிதனுக்கு பலவகைகளில் உதவியாக இருந்த போதிலும், விலங்கு மனிதனை தாக்கும் நிகழ்வுகளும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவுதல் போன்ற சில தீங்குகளும் ஏற்படுகின்றன.

பிரெஞ்சு வேதியியல் அறிஞர் லூயி பாஸ்டர், 1885 ஆம் ஆண்டு ஜூலை 6ம் நாள் அன்று வெறி நாயால் கடிக்கப்பட்ட ஜோசப் மீஸ்ட்ர் எனும் சிறுவனுக்கு முதன்முறையாக தடுப்பூசி அளித்து அச்சிறுவனை காப்பாற்றினார். மிகக் கொடுரமான ரேபீஸ் நோய்க்கு முதன் முதலில் தடுப்பூசி அளித்ததன் காரணமாகஜூலை 6ம் நாள் உலக விலங்கு மற்றும் மனிதர்களுக்கிடையே பரவும் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.

மனிதர்களுக்கு நோய்க்கிருமிகளால் ஏற்படும் நோய்களில் சுமார் 60 சதவீதம் விலங்குகள் மூலமாக ஏற்படுகின்றன.உதாரணமாக வெறிநாய்க் கடி, அடைப்பான் (ஆந்த்ராக்ஸ்), எலிக்காய்ச்சல் கன்றுவீச்சு நோய் சமீபத்தில் ஏற்பட்ட நிபா மற்றும் எபோலா, தட்டைப் புழுக்களால் ஏற்படும் நீர்கட்டி நோய் போன்றவற்றை குறிப்பிடலாம். இவற்றுள் பெரும்பாலான நோய்களால் கால்நடைகள் மற்றும் மனிதர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சமீபகாலமாக முக்கியத்துவம் அடைந்து வரும் பல நோய்கள் நச்சுயிரியால் (வைரஸ்) ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. ஆர்.என்.ஏ வகையைச் சார்ந்த வைரஸ் இயற்கையாக ஒரு செல்லில் உயிர் பெருக்கம் செய்யும் போது துல்லியமாக அதன் மரபணுக்கள் நகல்கள் செய்யப்படுவதில்லை. அவற்றால் ஒரு சில விலங்குகளில் மட்டுமல்லாது வேறு உயிரினத்திலும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

மனிதர்களுக்கு இந்நோய்கள், நோயுற்ற விலங்குகளுடன் நேரடியாக தொடர்பு கொள்வது மூலமாகவும், நோய்க்கிருமி உள்ள கால்நடை பொருட்களை கையாளுவது, உபயோகிப்பது மூலமாகவும் சிறுநீருடன் நேரிடையாக அல்லது மறைமுகமாக தொடர்பு கொள்வது, விலங்குகளிலிருந்து வடியும் திரவங்களுடன் தொடர்பு கொள்வது மூலமாகவும் பரவுகிறது. மேலும் விலங்குகள் கடித்தல், சிராய்ப்பு, புற ஒட்டுண்ணிகள் வழியாக, நோயுற்ற விலங்குகளிலிருந்து வடிந்த திரவங்களால் மாசுபட்ட நீரை அருந்துதல், நன்கு வேக வைக்காத இறைச்சி உட்கொள்ளுதல், கிருமிநீக்கம் செய்யப்படாத பால் உட்கொள்ளுதல் பண்ணைகளில் ஏற்படும் தூசுகள்,மூலமாகவும் இந்நோய் பரவுகிறது.

கூட்ட நெரிசலான வாழ்விடங்கள், துரிதமாக நகரமயமாகும் புறநகர் பகுதிகள், மக்கள் தொகை பெருக்கம், போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களால் மக்கள் இடம் விட்டு இடம் பெயர்தல், சர்வதேச பயணங்கள், கால்நடைகள், விலங்குகள், கால்நடை பொருட்கள் உலகமயமாக்கல், சுற்று சூழல் சீர்கேடு, மிக துரிதமான பண்ணை விரிவாக்கங்கள், வனங்களை அழித்து இயற்கையாக அமைந்த விலங்குகளின் புகலிடங்கள் பாதிப்படைதல், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றம் ஆகியவை நோய்கள் வேகமாக பெருகுவதற்கான உந்து சக்திகளாகும்.

கால்நடை மற்றும் விலங்குகளை பராமரிப்பவர்கள், செல்லப்பிராணிகளை நெருக்கமாக கையாளுபவர்கள், செல்ல பிராணிகளுடன் விளையாடும் குழந்தைகள், விவசாய பணியாளர்கள், உணவு துறை பணியாளர்கள், இறைச்சிக் கூடத்தில் பணிபுரிபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், விலங்குகள் ஆராய்ச்சிக் கூடப் பணியாளர்கள், வனத்துறை ஊழியர்கள், ராணுவம் மற்றும் துணை ராணுவப் பணியாளர்கள் குறிப்பாக காடுகளில் பணிநிமித்தம் செல்பவர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர்களுக்கு இந்நோய்த்தாக்கம் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நோய் வரும் முன் தவிர்க்க சில பாதுகாப்பு முறைகளாக,பாதுகாக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துதல், எலி, பூச்சி மற்றும் தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைத்தல், ‘நோய் தொற்றில்லா‘ பால் பண்ணை திட்டங்கள் மேலும் அமல்படுத்துதல், நோய்க்கிளர்ச்சிக் காலங்களில் கால்நடை மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்தல், செல்லப் பிராணிகள் மற்றும் பண்ணைகளுக்கு உரிமம் வழங்குதல், தோல் பதனிடும் தொழில் கூடங்களின் கழிவுகளை முறையாக கையாளுதல், வனவிலங்கு பூங்கா மற்றும் புகலிடங்களை கண்காணித்தல், ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைத்து ஒரு பகுதியில் நோய் ஏற்பட்டால் மற்றொரு பகுதிக்கு வாகனங்கள் மூலமாக கால்நடை மற்றும் வனவிலங்குகளை எடுத்து செல்வதைத் தவிர்த்தல் போன்றவற்றை கடைப்பிடிக்கலாம்.

இந்நோய்களை கட்டுப்படுத்தவும், அறவே ஒழிப்பதற்கும் ஒருங்கிணைந்த சுகாதாரம் உலகளவில் செயல்பட்டால், விலங்கு மற்றும் மனிதர்களுக்கு நல்வாழ்வு அமைய மிக அதிகமான சாத்தியக் கூறுகள் உள்ளன.அரசு அங்கீகாரம் பெற்ற இறைச்சிக் கூடங்களில் கால்நடை மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் இறைச்சிக் கூடங்கள் செயல்படுவதால் அச்சப்பட தேவையில்லை. மேலும் நன்கு வேகவைத்த இறைச்சியில் நோய் ஏற்படுத்தும் கிருமிகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அதுபோல பால் கிருமி நீக்கம் செய்யப்பட்டு வீடுகளில் காய்ச்சியே பயன் படுத்தப்படுவதால் நோய்தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. இன்றைய நாளில் நமக்கு தேவை இந்நோய்களை பற்றிய விழிப்புணர்வே. இன்று (ஜூலை 6-ந்தேதி)உலக விலங்கு மற்றும் மனிதர்களிடையே பரவும் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு தினம். 

- முனைவர் கோ.ரவிக்குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம்.

மேலும் செய்திகள்