வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-07-05 23:15 GMT
சிதம்பரம்,

பரங்கிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் அபுபக்கர்(வயது 51). இவர் சவுதி அரேபியாவில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரியும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷகிர், முஸ்தபா, ரஷாக் ஆகியோருடன் அபுபக்கருக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பர்களானார்கள். இதனை தொடர்ந்து அபுபக்கர் கடந்த 2013-ம் ஆண்டு பரங்கிப்பேட்டைக்கு வந்து விட்டார். அதன்பிறகு அவர் சவுதிஅரேபியாவிற்கு செல்லவில்லை. இருப்பினும் அங்குள்ள நண்பர்களுடன் அபுபக்கர் செல்போனில் பேசி வந்தார்.

இந்த நிலையில் அபுபக்கரிடம் 3 பேரும், இந்த நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், தங்களுக்கு தெரிந்த நபர்களின் புகைப்படம் மற்றும் ஆவணங்களை அனுப்பி வைக்குமாறும், அதற்காக அந்தந்த நபர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வசூலித்து தருமாறும் கூறி உள்ளனர். அதன்படி அபுபக்கரும், தனக்கு தெரிந்த நண்பர்களிடம் கூறி 8 பேரிடம் மொத்தம் ரூ.4½ லட்சத்தை வசூலித்து வைத்திருந்தார். இது பற்றி 3 பேருக்கும் கூறப்பட்டது. உடனே 3 பேரும் புறப்பட்டு சிதம்பரத்துக்கு வந்தனர். அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கி இருந்த அவர்களிடம் அபுபக்கர் ரூ.4½ லட்சத்தை கொடுத்தார். அதன்பிறகு அவர்கள், 8 பேருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை

இது குறித்து அபுபக்கர் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஷகிர், முஸ்தபா, ரஷாக் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்