சிறுபான்மையின மக்களுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம்

கடலூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி சிறுபான்மையின மக்களுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-05 23:10 GMT
கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலுார் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின்மூலம் சிறுபான்மையின மக்களாகிய கிறிஸ்தவ, இஸ்லாமிய, புத்த, சீக்கிய, பார்சி, சவுராஷ்டிரா மற்றும் ஜெயின் பிரிவினர் பயன்பெறும் வகையில் தனிநபர் கடன் திட்டம், கல்விக்கடன் திட்டம், சுய உதவிக்குழுக் கடன் திட்டம், கறவைமாடு கடன் திட்டம் மற்றும் ஆட்டோ கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் பயன்பெறும் வகையில் மூன்று கட்டங்களாக சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) கடலூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு கடலூர் தாலுகா அலுவலகத்திலும், 24-ந்தேதி அன்று சிதம்பரம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு சிதம்பரம் தாலுகா அலுவலகத்திலும் மற்றும் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 7-ந்தேதி விருத்தாசலம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திலும் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

மேற்கண்ட நாட்களில் நடைபெறும் கடன் வழங்கும் முகாம்களில் அந்தந்த கோட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு கலெக்டர் தண்டபாணி கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்