பழனியில் பரபரப்பு: தெருநாய் கடித்ததில் வெறிபிடித்து ஓடிய எருமை மாடு

தெருநாய் கடித்ததில், வெறிபிடித்து ஓடிய எருமை மாட்டினால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-05 23:09 GMT
பழனி,


பழனி பகுதியில், கடந்த சில வாரங்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தெருநாய்கள் கடித்ததில் 7 பேர் காயமடைந்தனர். பொதுமக்களை மிரட்டுகிற தெருநாய்கள் கால்நடைகளையும் விட்டு வைக்கவில்லை. தற்போது ஆடு, மாடுகளையும் கடித்து வருகின்றன.

இதை உறுதிப்படுத்தும் வகையில், பழனி தட்டான்குளம் ரெயில்வே கேட் அருகே சாலையோரத்தில் இருந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்த ஒரு எருமை மாட்டை அந்த வழியாக வந்த தெருநாய் நேற்று துரத்தி சென்று கடித்தது. இதனால் அந்த மாட்டுக்கு வெறிப்பிடித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்களை, அந்த மாடு முட்டத்தொடங்கியது. மேலும் அங்கும் இங்குமாக வெறிபிடித்து ஓட்டம் பிடித்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து பழனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், எருமை மாட்டை லாவகமாக பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மாட்டின் உரிமையாளர் அங்கு வந்தார். அவரிடம், எருமை மாட்டை தீயணைப்பு படையினர் ஒப்படைத்தனர். கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்று மாட்டுக்கு சிகிச்சை அளிப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

வெறிபிடித்த எருமை மாடு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஓடிய சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே பழனி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்