ரெயில் மறியலில் ஈடுபட்ட 6 பேர் கைது
அரக்கோணத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 6 பேரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.;
அரக்கோணம்,
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு சென்னைக்கு செல்ல வேண்டிய விரைவு மின்சார ரெயில் கடந்த சில தினங்களாக காலதாமதமாக சென்று வந்தது. சம்பவத்தன்று விரைவு மின்சார ரெயில் காலை 7.30 மணி வரை புறப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நின்று கொண்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே அதிகாரிகள், போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அரக்கோணம் வந்த மின்சார ரெயில்கள் காலதாமதமாக வந்ததால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நின்று கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
மேலும் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள். திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அரக்கோணத்தில் நிறுத்தம் கிடையாது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காததால் போலீசார் பயணிகள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். போலீசார் தடியடி நடத்தியதால் தண்டவாளத்தில் போராட்டம் நடத்திய பயணிகள் சிதறி ஓடினார்கள்.
இந்த நிலையில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அன்வர்திகான்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் (வயது 30), பள்ளிப்பட்டை சேர்ந்த கிரண்குமார் (24), திருத்தணியை சேர்ந்த தனசேகர் (26), கஜேந்திரன் (30), கண்ணன் (27), சித்தேரியை சேர்ந்த குருமூர்த்தி (18) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்ததாக அரக்கோணம் டவுன் போலீசார் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக மின்சார ரெயில் சரியான நேரத்திற்கு இயக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில் மறியல் போராட்டம், தண்டவாளத்தில் இறங்கி நின்று போராட்டம் நடத்தியதால் ரெயில் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 8 பிளாட்பாரங்களில் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை தடுக்க துப்பாக்கி ஏந்திய ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ரெயில் பயணிகள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டிய சம்பவம் கண்டனத்திற்குரியதாகும் என பொதுமக்கள், பல்வேறு சமூக அமைப்பை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.