காங்கிரஸ் பெண் பிரமுகர் மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தவர் கைது குஜராத்தை சேர்ந்தவர்

காங்கிரஸ் பெண் பிரமுகர் மகளை கற்பழிப்பதாக டுவிட்டரில் மிரட்டல் விடுத்த குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-07-05 22:45 GMT
மும்பை, 

காங்கிரஸ் பெண் பிரமுகர் மகளை கற்பழிப்பதாக டுவிட்டரில் மிரட்டல் விடுத்த குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுவிட்டரில் மிரட்டல்

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருப்பவர் பிரியங்கா சதுர்வேதி. மும்பையை சேர்ந்தவர். இவருக்கு டுவிட்டரில் சமீபத்தில் ஒருவர் மிரட்டல் விடுத்து இருந்தார். அதில், பிரியங்கா சதுர்வேதியின் 10 வயது மகளை கற்பழித்து விடுவதாக அந்த நபர் கூறியிருந்தார்.

இதுகுறித்து பிரியங்கா சதுர்வேதி கடந்த 2-ந்தேதி மும்பை, டெல்லி போலீசில் புகார் அளித்து இருந்தார்.

இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மத்திய உள்துறையும் உத்தரவிட்டு இருந்தது.

குஜராத்தில் கைது

இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள பாவ்லா பகுதியை சேர்ந்த கிரிஷ் (வயது36) என்பவர் தான் பிரியங்கா சதுர்வேதிக்கு டுவிட்டரில் மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து குஜராத் சென்ற மும்பை போலீசார் அந்த நபரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரை மும்பை அழைத்து வந்து தின்டோஷி கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

தனக்கு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுத்த மும்பை, டெல்லி போலீசாருக்கு பிரியங்கா சதுர்வேதி டுவிட்டரில் நன்றி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்