நவிமும்பையில் பயங்கரம் தொழில் அதிபர் சுட்டுக்கொலை 2 பேருக்கு வலைவீச்சு
நவிமும்பையில் தொழில் அதிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்து அவரை தீர்த்து கட்டிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;
மும்பை,
நவிமும்பையில் தொழில் அதிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்து அவரை தீர்த்து கட்டிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தொழில் அதிபர்
நவிமும்பை காமோத் தேவை சேர்ந்த தொழில் அதிபர் சாந்தாராம் கடால் (வயது33). அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் அந்த கட்டிடத்தின் நுழைவு வாயில் பகுதியில் தனது உறவினர் ஒருவருடன் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் 2 ஆசாமிகள் வந்து இறங்கினார்கள். அவர்களது கையில் கூர்மையான ஆயுதங்கள் இருந்தன.
திடீரென சாந்தாராம் கடாலை நோக்கி ஆவேசத்துடன் ஓடிவந்த அவர்கள், தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் அவரை சரமாரியாக தாக்கினார்கள்.
சுட்டுக்கொலை
அப்போது, அந்த ஆசாமிகளில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சாந்தாராம் கடாலை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சாந்தாராம் கடால் ரத்த வெள்ளத்தில் மயங்கிச்சரிந் தார். இதைப்பார்த்து அவரது உறவினர் அதிர்ச்சியில் உறைந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த ஆசாமிகள் இருவரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாந்தாராம் கடாலை சுட்டுக்கொன்ற கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் இருவரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
தொழில் அதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.