தனியார் பள்ளி அதிகாரியிடம் கத்திமுனையில் பணம் பறித்த 4 பேர் கைது
பல்லடம் அருகே தனியார் பள்ளி அதிகாரியிடம் கத்தி முனையில் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பல்லடம்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உகாயனூர் அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 30). இவர் பல்லடம் வலசுபாளையத்தில் உள்ள ஜெய்சக்தி ராஜகுருகுலம் பள்ளியில் போக்குவரத்து மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று லோகநாதன் பள்ளிக்கூடம் முடிந்து வெளியே வந்த போது கார், மோட்டார்சைக்கிளில் வந்த 4 பேர் திடீரென்று அவரை வழிமறித்தனர். பின்னர் கத்திமுனையில் அவரை மிரட்டி பள்ளிக்கூடத்தில் உள்ள பணத்தை எடுத்து தரும்படி கூறினார்கள். அதற்கு லோகநாதன் மறுத்ததால் அவரிடம் இருந்த ரூ.1,000-த்தை அந்த 4 பேரும் பறித்துச்சென்றனர்.
இது குறித்து பல்லடம் போலீசில் லோகநாதன் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையதுரஷீத் சிக்கந்தர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சந்தேகத்தின் பேரில் கார், மோட்டார்சைக்கிளில் வந்த 4 பேரை பிடித்தனர்.
விசாரணையில் மும்பையை சேர்ந்த சகோதரர்களான ரோகித் (25), செல்வம் (23) மற்றும் திருநெல்வேலி தச்சநல்லூரை சேர்ந்த சுந்தர் (25), திருச்சி ஏழுநகரை சேர்ந்த பெரியசாமி (40) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 4 பேரும் சேர்ந்துதான் லோகநாதனை மிரட்டி பணம் பறித்ததும், இவர்கள் 4 பேரும் கோவை ஒண்டிபுதூரில் தங்கியிருந்து ரப்பர் நிறுவனத்தில் வேலை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சுந்தர் மற்றும் பெரியசாமி ஆகியோர் மீது கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.