மக்களின் எதிர்பார்ப்புகளை எங்கள் கூட்டணி அரசு நிறைவேற்றும் முதல்–மந்திரி குமாரசாமி உறுதி

மக்களின் எதிர்பார்ப்புகளை எங்கள் கூட்டணி அரசு நிறைவேற்றும் என்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்–மந்திரி குமாரசாமி உறுதி அளித்தார்.;

Update: 2018-07-05 22:00 GMT

பெங்களூரு,

மக்களின் எதிர்பார்ப்புகளை எங்கள் கூட்டணி அரசு நிறைவேற்றும் என்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்–மந்திரி குமாரசாமி உறுதி அளித்தார்.

முதல் பட்ஜெட்

கர்நாடக சட்டசபையில் முதல்–மந்திரி குமாரசாமி நேற்று தனது முதல் முறையாக ‘பட்ஜெட்’ தாக்கல் செய்து பேசியதாவது:–

‘‘கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் இது. கடந்த மே மாதம் 12–ந் தேதி நடைபெற்ற தேர்தல் கர்நாடகத்தின் பாதையையே மாற்றி இருக்கிறது. எதிர்–எதிர் திசையில் இருந்தபடி தேர்தலை சந்தித்த இரண்டு கட்சிகள் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து கர்நாடகத்தில் அரசை அமைத்து உள்ளது. இதுதான் ஜனநாயகத்தின் மாண்பு. தேசிய, மாநில அரசியலில் நிகழ்ந்து வரும் மாற்றங்களால் கூட்டணி அரசாங்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

மக்களின் எதிர்பார்ப்பு

அதனை ஏற்றுக்கொண்டு மாநிலத்தில் நாங்கள் கூட்டணி அரசை ஏற்படுத்தி இருக்கிறோம். அதற்காக குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை வகுத்து உள்ளோம். அதன்படி தேர்தல் அறிக்கையில் இரு கட்சிகளும் குறிப்பிட்ட முக்கிய அம்சங்களை ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனைப்படி நிறைவேற்ற உறுதி பூண்டு இருக்கிறோம். கூட்டணி தர்மத்தின் விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கர்நாடக மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவோம்.

பொதுவாக புதிய அரசு அமைந்தவுடன் அரசிடம் இருந்து மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்தவகையில் மக்களை ஏமாற்றாமல் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய அர்ப்பணிப்பு உணர்வுடன் முயற்சிகளை மேற்கொள்வோம். அரசின் முன்பு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் மிகப்பெரிய சவால் உள்ளது. இந்த அரசின் முதல் கடமை அதற்கு தேவையான நிதியை திரட்டுவதுதான். அதற்கான பணியை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். முதல்கட்டமாக முதல்–மந்திரி அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களில் தேவையற்ற செலவுகளை குறைத்து உள்ளோம். எனது மந்திரிசபை சகாக்களும் இதனை கடைப்பிடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

முக்கியத்துவம்

கர்நாடகம் நாட்டில் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் உள்ளது. இதோடு திருப்தி அடைந்துவிடாமல் மற்ற துறைகளிலும் முதலிடம் பிடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அந்த வகையில் விவசாயம் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதுபோல் கர்நாடகத்தின் வளர்ச்சியில் சேவைத்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. அதற்கும் சிறப்பான முறையில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்