அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் திருட்டு

ஜோலார்பேட்டை அருகே அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-07-05 22:30 GMT
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி வெள்ளாகவுண்டனூரை சேர்ந்தவர் குப்பன் (வயது 35). இவர் பொன்னேரியில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடை அருகில் சின்னபொன்னேரியை சேர்ந்த ஆஞ்சி (42) என்பவர் செருப்பு கடையும், சின்னமோட்டூரை சேர்ந்த முரளி (35) என்பவர் இருசக்கர வாகன ஷோரூமும், கவுண்டப்பனூரை சேர்ந்த கணபதி (41) என்பவர் அசோசியேட்ஸ் நிறுவனமும் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், அவரவர் கடைகளை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கடைகளின் உரிமையாளர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அங்கு வந்த கடைகளின் உரிமையாளர்கள் அவரவர் கடைகளின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது குப்பன் கடையில் ரூ.33 ஆயிரம், ஆஞ்சி கடையில் ரூ.47 ஆயிரம், முரளி ஷோரூமில் ரூ.1½ லட்சம், கணபதி கடையில் ரூ.6 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்தை மர்ம நபர்கள் பணப்பெட்டியை திறந்து திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளியை அடுத்த டோல்கேட் பகுதியில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றனர். அப்போது சத்தம் கேட்கவே, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே கும்பல் இங்கு வந்து கைவரிசையை காட்டி இருப்பார்களோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்