தவறான தகவல்களை கவர்னர் கிரண்பெடி பதிவிடுகிறார் நாராயணசாமி குற்றச்சாட்டு

கவர்னர் கிரண்பெடி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

Update: 2018-07-05 22:45 GMT
புதுச்சேரி,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக சட்டசபையில் அளித்த விளக்கத்தை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது. யூனியன் பிரதேசங்களான டெல்லி, புதுச்சேரியில் சட்டமன்றம் இருப்பதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது. அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் கவர்னர் நடக்கவேண்டும். கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி வாட்ஸ் அப் மூலம் ஒரு செய்தியை அரசு அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பி உள்ளார். அதில் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு டெல்லிக்கு மட்டும் பொருந்தும், புதுச்சேரிக்கு பொருந்தாது என்று உள்ளது. முற்றிலும் தவறான தகவலை அவர் பதிவு செய்துள்ளார்.


இந்த தீர்ப்பு தொடர்பாக பிரபல வக்கீல் சோலி சொராப்ஜி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதில் புதுவைக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் என்று கூறியுள்ளனர். அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு என்பது இந்தியா முழுமைக்கும் பொருந்தும். புதுவைக்கு இந்த தீர்ப்பு முழுமையாக பொருந்தும்.

கோப்புகளுக்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது. புதுவை கவர்னர் அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் தீர்ப்பும் விரைவில் வர உள்ளது.


கவர்னர் மின்துறையில் ஆய்வு செய்து ரூ.51 கோடி வருமானம் வந்துள்ளதாக தெரிவித்து இருந்தார். இப்போது ரூ.5 கோடி வந்ததாக கூறியுள்ளார். மீதி தொகை எங்கே போனது? அதைத்தான் சட்டசபையில் அமைச்சர் கமலக்கண்ணன் ஆதாரத்துடன் தெரிவித்தார்.

கவர்னரின் விதிமுறை மீறல் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். யூனியன் பிரதேசங்களில் சட்டமன்றம் அமைந்தபிறகு அதன் செயல்பாடுகளில் தலையிட ஜனாதிபதிக்கே அதிகாரம் கிடையாது. அப்படி இருக்க அவரது ஏஜெண்டான கவர்னருக்கு ஏது அதிகாரம்?


இனிமேல் கவர்னரின் ஒப்புதலுக்கு எந்தெந்த கோப்புகளை அனுப்பவேண்டுமோ அதை மட்டும்தான் அனுப்புவோம். மற்றவை குறித்து தகவல்கள்தான் தெரிவிப்போம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்