அரசு பஸ் மோதி என்ஜினீயரிங் மாணவர் சாவு

கோவையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-07-05 22:00 GMT
கோவை, 

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வேம்பலூரை சேர்ந்தவர் நரேஷ் (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கோவை காந்திபுரத்தில் அறை எடுத்து தங்கி இருந்தார். நரேஷ் தினமும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் நரேஷ் தனது மோட்டார் சைக்கிளில் கோவை- அவினாசி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அவர் லட்சுமி மில் சந்திப்பு சிக்னல் அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ் திடீரென்று நரேசின் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது.

இதில் தூக்கி வீசப் பட்ட நரேஷ் ரோட்டில் விழுந்தார். அப்போது அந்த பஸ்சின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நரேஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து காரணமாக லட்சுமி மில் சந்திப்பு சிக்னலில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த பகுதிக்கு சென்று, போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் விபத்து குறித்து கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்