நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் தீயை அணைக்கும் பணி மும்முரம் மாநகராட்சி ஆணையாளர் தகவல்

நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-05 20:45 GMT

நெல்லை,

நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது என மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

குப்பையில் தீ

நெல்லை ராமையன்பட்டியில் மாநகராட்சி உரக் கிடங்கு உள்ளது. அங்குள்ள குப்பை கிடங்கில் கடந்த 1–ந் தேதி மாலையில் தீப்பிடித்தது. பலத்த காற்று வீசியதால் பழைய குப்பையில் தீ பற்றி எரிந்தது. 2 தீயணைப்பு வாகனங்கள், 5 மாநகராட்சி குடிநீர் லாரிகள் மூலம் தீ அணைக்கப்பட்டு வருகிறது.

தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. புகை மூட்டம் மட்டும் காணப்படுகிறது. பம்ப் செட் மூலமும், தீயணைப்பு லாரி மூலமும் தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. ராமையன்பட்டி உரக் கிடங்கில் எழும் புகையை விரைவில் முழுவதுமாக அணைக்கப்படும்.

நுண் உர நிலையம்

மேலும் ராமையன்பட்டி உரக்கிடங்கில் திடக்கழிவு அதிக அளவு வருவதை தடுக்கும் பொருட்டு, நவீன முறையில் விஞ்ஞான பூர்வமாக மாநகர் பகுதியில் 41 இடங்களில் நுண் உர நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் சங்கர்நகர் இந்திய சிமெண்டு ஆலை நிறுவனத்தில் சிமெண்டு தொழிற்சாலை ஏரி உலையில் எரிபொருளாக பயன்படுத்தும் திட்டத்தை நடை முறைபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்