நெல்லை அருகே அட்டை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து புகை மண்டலத்தால் கிராம மக்கள் அவதி

நெல்லை அருகே அட்டை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் கிராம மக்கள் அவதிப்பட்டனர்.;

Update: 2018-07-05 21:30 GMT

பேட்டை,

நெல்லை அருகே அட்டை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் கிராம மக்கள் அவதிப்பட்டனர்.

அட்டை தொழிற்சாலை

நெல்லை அருகே திருப்பணிகரிசல்குளத்தை அடுத்த வெள்ளாளங்குளத்தில் அட்டை தொழிற்சாலை உள்ளது. இங்கு சுமார் 600 பேர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் சிலர் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்கிறார்கள்.

இந்த தொழிற்சாலையில், திறந்தவெளியில் சுமார் 5 ஏக்கர் பரப்பில் அட்டை, பாலித்தீன் பைகள், கேன் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.

தீப்பிடித்தது

நேற்று மாலை 6 மணியளவில் திடீரென அந்த கழிவுப்பொருட்களில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே பேட்டை மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். திறந்தவெளி என்பதால் கழிவுப்பொருட்களில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியவில்லை.

புகை மண்டலம்

இதையடுத்து தீ மேலும் பரவாமல் தடுக்க, பொக்லைன் எந்திரம் மூலம் கழிவுப்பொருட்களை சுமார் 50 அடி தூரத்துக்கு இடைவெளி விட்டு பிரித்து வைத்தனர். சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கழிவுப்பொருட்களில் தீப்பிடித்து எரிந்தது. அந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து தீ தானாக அணைந்துவிடும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக, அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. வெள்ளாளங்குளம், திருப்பணிகரிசல்குளம், வெட்டுவாங்குளம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் புகை காணப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.

பரபரப்பு

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீவிபத்துக்கான காரணம் குறித்து சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்