அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-07-05 23:00 GMT
விருதுநகர்,

இந்த கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம் பேசியதாவது:-


மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2016-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மாவட்டத்தில் 1857 வாக்குச்சாவடிகள் இருந்தன. அது 1.9.2016 அன்று 1,872 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளும், திருவில்லிபுத்தூரில் 283 வாக்குச்சாவடிகளும், சாத்தூரில் 279 வாக்குச்சாவடிகளும், சிவகாசியில் 276 வாக்குச்சாவடிகளும், விருதுநகரில் 253 வாக்குச்சாவடிகளும், அருப்புக்கோட்டையில் 250 வாக்குச்சாவடிகளும், திருச்சுழியில் 271 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,872 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், வாக்காளர்களின் எண்ணிக்கை ஊரக பகுதிகளில் 1,200-க்கு அதிகமாகவும், நகராட்சிப் பகுதிகளில் 1,400-க்கு அதிகமாகவும் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, அவற்றை பிரித்து, மேலும் கூடுதல் வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்படவுள்ளது. இதுதொடர்பாக ஆட்சேபனை ஏதும் இருப்பின் ஒருவார காலத்திற்குள் பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.


வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வரப்பெற்றுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விருதுநகர் மாவட்ட ராமநாதபுரம் வேளாண் விற்பனை கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சியினர் கூறும் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் தொகுத்து அரசு விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வழங்கப்பட்டது. கூட்டத்தில், வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி, கோட்டாட்சியர்கள் மங்களராமசுப்பிரமணியன்(சாத்தூர்), தினகரன்(சிவகாசி), செல்லப்பா(அருப்புக்கோட்டை), தனி வட்டாட்சியர்(தேர்தல்) லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்