மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்: 3,200 விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க அனுமதி கடிதம்

தேனி மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு முகாமில் 3 ஆயிரத்து 200 விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க அனுமதி கடிதம் வழங்கபட்டுள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.;

Update: 2018-07-05 22:45 GMT
உத்தமபாளையம்,

தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சிறு, குறு விவசாயி சான்று வழங்குவதற்கு வருவாய்த்துறையினர் காலதாமதம் செய்து வருவதாக கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் புகார் செய்தனர்.

இதையடுத்து வருவாய்த்துறையினரின் தாமதத்தை தவிர்க்கவும், உடனடியாக சொட்டுநீர் பாசனம் பெறுவதற்கும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு முகாம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.


அதன்படி, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கலந்து கொண்டு 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சிறு, குறு, விவசாயி சான்றுகளை வழங்கினார். இதையடுத்து விவசாயிகளிடம் இந்த சிறப்பு முகாம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் கூறும்போது, விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் திட்டங்கள் குறித்து, இங்குள்ள தோட்டக்கலைத்துறை அல்லது வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். இதில் தாமதம் அல்லது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் என்னிடம் புகார் செய்யலாம் என்றார்.

இதையடுத்து நிருபர்களிடம் கலெக்டர் கூறும்போது, தேனி மாவட்டம் முழுவதும் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்து 200 விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க அனுமதி கடிதம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாமில் கலந்துகொள்ளாத விவசாயிகளுக்கும் தாமதம் இன்றி சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

இதேபோல் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் அடங்கல் ஆகியவற்றை வழங்கினர். முகாமில் கம்பம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சந்திரசேகரன் பேசும் போது, தேனி மாவட்டத்திலேயே கம்பம் வட்டார பகுதியில்தான் காய்கறி, பழங்கள் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கு கம்பம் ஒன்றியத்தில் 350 ஹெக்டேர் நிலங்களுக்கு மானியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்