நெல்லை- நாகர்கோவில் இடையே கண்டக்டர் இல்லாத நவீன பஸ்கள் இயக்கம்
நெல்லை-நாகர்கோவில் இடையே கண்டக்டர் இல்லாத நவீன பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.
நெல்லை,
நெல்லை-நாகர்கோவில் இடையே கண்டக்டர் இல்லாத நவீன பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.
நவீன பஸ்கள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இருப்பிடத்தை கண்டறியும் ஜி.பி.எஸ். வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி உள்ளிட்ட அம்சங்களுடன் நவீன பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விபத்துகளை தவிர்க்கும் வகையில் தானியங்கி பிரேக் வசதி, கவனக்குறைவாக வண்டி ஓட்டும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து பஸ் விலகி ஓடினால் அதை எச்சரிக்கும் வகையில் அலாரம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது.இந்த நவீன பஸ்களில் கண்டக்டர் கிடையாது. இந்த பஸ்சேவையை சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த புதிய பஸ் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் சேவை நெல்லையில் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு பஸ்சும் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு 5 முறையும், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு 5 முறையும் இயக்கப்பட்டது.
சிறப்பு வசதி
இந்த பஸ்களில் பயணம் செய்யும் பணிகளுக்கு டிக்கெட் வழங்க நெல்லை புதிய பஸ் நிலையத்தில் சிறப்பு வசதியாக தனி கவுண்டர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 3 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் நாகர்கோவில் பஸ் நிலையத்திலும் டிக்கெட் வழங்க தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய பஸ் சேவை படிப்படியாக நெல்லை- தூத்துக்குடி, நெல்லை- தென்காசி ஆகிய வழி தடங்களிலும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.