18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு வந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும்

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு வந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று ஈரோட்டில் திருநாவுக்கரசர் கூறினார்.

Update: 2018-07-05 21:45 GMT
ஈரோடு,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சி ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி ஈரோடு தெற்கு மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டம் நேற்று பூந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது தமிழகத்தில் 60 கட்சிகள் உள்ளன. ரஜினி கட்சி தொடங்க இருக்கிறார். விஜய் போன்றோர் கட்சி தொடங்க போவதாக தகவல் உள்ளது. ஏற்கனவே கமல் கட்சி தொடங்கி விட்டார். எனவே தேர்தலுக்கு முன்பு இன்னும் 10 கட்சிகள் வரை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. அ.தி.மு.க. பல அணிகளாக இருக்கிறது. எனவே தற்போதைய நிலையில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது.

ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் உணர்வும், ஆசையும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி, காமராஜர் ஆட்சியாக மலரவேண்டும் என்பதே. எனவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைய வேண்டும் என்ற லட்சியத்துடன் பணி செய்வோம்.

தமிழக மக்களுக்கு காங்கிரஸ் மீது எப்போதும் நம்பிக்கை உண்டு. அதுபோல் நமது தலைவர் ராகுல் காந்தியும் தமிழக மக்கள் மீது அன்பு வைத்து உள்ளார். வருகிற டிசம்பர் மாதத்துக்கு முன்பு ஒரு லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களை சேர்த்து, அவர்களை தலைவர் ராகுல்காந்தி சந்திக்கும் வகையில் தமிழகத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள ஊழல் ஆட்சியும், மத்தியில் உள்ள மக்களுக்கு பயன் இல்லாத, பொய்யை மட்டுமே கூறும் மோடியின் ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். அந்த பணியை காங்கிரஸ் செய்யும்.

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படாததால் மக்கள் நலத்திட்டப்பணிகள் செய்யப்படவில்லை. எனவே உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு விரைந்து முடிக்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பு வந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழலாம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்காக 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழக அரசும் ஆலையை மூடி உத்தரவிட்டு உள்ளது. எனவே எந்த வகையில் ஆலையை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், தமிழக அரசு உறுதியாக இருந்து தனது உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 வழிச்சாலையில் சென்றால் 30 நிமிடம் குறைவாக இருக்கும் என்கிறார்கள். அது 10 ஆயிரம் கோடி திட்டம் என்றும் கூறுகிறார்கள். நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால், ஏற்கனவே இருக்கிற கிராம சாலைகள், நகர சாலைகள், ஒன்றிய சாலைகள், 4 வழி மற்றும் தேசிய சாலைகளை செப்பனிட்டு சரி செய்தாலே அவர்கள் குறிப்பிடும் அளவு நேரத்தை மிச்சப்படுத்த முடியும். எந்த திட்டமாக இருந்தாலும் மக்கள் விருப்பம் இல்லாமல் நிறைவேற்றக்கூடாது. காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வட்டார தலைவர் முத்துக்குமார் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் ரவி நன்றி கூறினார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மகளிர் அணி மாநில தலைவர் ஜான்சிராணி மற்றும் வர்த்தக அணி நிர்வாகி ஏ.மாரியப்பன் உள்பட மாநில, மாவட்ட பொறுப்பார்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்