தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்கள் காலித்தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்கள் நேற்று காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்கள் நேற்று காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் நேற்று தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு கருப்பு உடையில் காலித்தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் தலைமை தாங்கினார். அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் அந்தோணியம்மாள் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி பேசினார். மாநில துணைத்தலைவர் சுலோசனா வரவேற்று பேசினார்.
கோரிக்கைகள்ஆர்ப்பாட்டத்தில் 8–வது ஊதிய மாற்ற பரிந்துரையின்படி குறைந்தபட்ச பென்சன் ரூ.7 ஆயிரத்து 850–ஐ, குடும்ப ஓய்வூதியமாக அகவிலைப்படியுடன் வழங்கவேண்டும், இலவச பஸ்பாஸ், மருத்துவப்படி, பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்படாத பணி ஓய்வு உத்தரவை உடனடியாக வழங்க வேண்டும். அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதா மாதம் பென்சன் வழங்காமல் அலைக்கழிக்கும் போக்கை கைவிட்டு, மாதம் தோறும் பென்சன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
யார்–யார்?ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கம் அண்ணாமலை பரமசிவன், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அல்போன்ஸ்லிகோரி, மாவட்ட துணைத்தலைவர் கருணாகரன், தமிழ்நாடு பள்ளி, கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கம் சாம்பசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் உத்தண்டராமன் நன்றி கூறினார்.