தாலுகா அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தர்ணா

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-07-05 21:45 GMT
ஈரோடு,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. நேற்று இந்த போராட்டம் ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக நடந்தது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

பல்வேறு மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் தெரிவிக்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

மேலும் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேற்று ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கிடு, ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் மணிபாரதி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

இதில் ஈரோடு வட்ட கிளை செயலாளர் சுகுமார், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மாரிமுத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் போராட்டம் காரணமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் செய்திகள்