நம்பியூர் அருகே வீடு புகுந்து 11 பவுன் நகை- பணம் திருட்டு

நம்பியூர் அருகே வீடு புகுந்து 11 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-07-05 21:30 GMT
நம்பியூர்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள சாவக்காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 71). இவருடைய மனைவி செல்வி (60). இவர்களுக்கு 3 மகள்கள். அனைவருக்கும் திருமணம் ஆகி, குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள். கிருஷ்ணசாமியின் மூத்த மகளான சித்ரா என்பவருடைய மாமனார் மற்றும் மாமியாருக்கு 60-ம் கல்யாணம் தஞ்சை அருகே உள்ள திருவிடைமருதூரில் கடந்த 2-ந்தேதி நடந்தது. இதில் கலந்துகொள்ள கிருஷ்ணசாமி மற்றும் அவருடைய மனைவி செல்வி அங்கு சென்றுவிட்டனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க ஜன்னலை உடைக்கப்பட்டு, கதவும் திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி, வீட்டின் அறையில் உள்ள பீரோவை பார்த்தார். அங்கு பீரோ திறந்து கிடந்ததோடு, உள்ளே இருந்த 11 பவுன் நகை, ரூ.1 லட்சம், 10 பட்டுப்புடவைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை காணவில்லை. இதுபற்றி அவர் சேவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் கிடைத்ததும் போலீசார் திருட்டு நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த திருட்டு சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்