நெய்வேலியில், ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-04 23:38 GMT
நெய்வேலி, 

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இன்கோசர்வ், ஹவுசிகோஸ் ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானா அருகில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் சக்கரபாணி தலைமை தாங்கினார். தொ.மு.ச. ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் பழனிவேல், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க தலைவர் சின்ன ரகுராமன், பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் முருகவேல், எல்.எல்.எப். சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் வாழ்த்துரை வழங்கினர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வுபெறும், இன்கோசர்வ், ஹவுசிகோஸ் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு அன்றே நிறைவு விழா நடத்தி பணிக்கொடை வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை இழப்பிற்கும், பணி நாட்கள் குறைவுக்கும் காரணமான தனியார் நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் 26 நாட்கள் வேலையும், 7-ந்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்.

நெய்வேலியில் உள்ள இ.எஸ்.ஐ. மருந்தகத்தை 100 பேர் கொண்ட உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், கழிவுநீர் கால்வாய் மற்றும் தொட்டியில் தொழிலாளர்கள் இறங்கி வேலை செய்யாமல் நவீன எந்திரங்களை பயன்படுத்த வேண்டும், சுகாதார பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்க கோருவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் அமிர்தலிங்கம், ஸ்டாலின், குப்புசாமி, சங்கர், சிவலிங்கம், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர தொழிலாளர்களின் தொழிற்சங்க நிர்வாகிகள் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்