சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கம்மாபுரம் அருகே சுகாதாரமான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-04 23:26 GMT
கம்மாபுரம், 

விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்டது வி.சாத்தப்பாடி கிராமம். இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மின்மோட்டாரை அதிகாரிகள் சரிவர பராமரிக்காததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதடைந்தது. பொதுமக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து புதிதாக மின்மோட்டார் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீரானது சுகாதாரமற்ற முறையில் பழுப்பு நிறத்தில் வருகிறது. இதை அருந்துவதனால் கிராம மக்களுக்கு பலவித நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கிராம மக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், அவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவர்கள் குடிநீருக்காக அருகில் உள்ள விளைநிலங்களுக்கும், கிராம பகுதிகளுக்கும் காலி குடங்களுடன் சென்று குடிநீர் பிடித்து வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 7 மணியளவில் வி.சாத்தப்பாடி பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சுகாதாரமான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்காத கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலையில் மரக்கட்டைகள், முட்செடிகளை போட்டனர்.

பின்னர் விருத்தாசலம் தாசில்தார் ஸ்ரீதரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுகாதாரமான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்தார். இதையேற்று 9 மணி அளவில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். 2 மணிநேரம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்