போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-07-04 23:19 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து விதிகளை மீறிச்செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாகவும் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டிச்செல்லுதல், அதிவேகமாக செல்லுதல், சிக்னலில் நிற்காமல் செல்லுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல் இப்படி போக்குவரத்து விதிகளை மீறிச்செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து அவர்களது ஓட்டுனர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும் சாலை விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதிகம் விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து அங்கு பேரிகார்டு அமைத்து விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருமால், ரவிச்சந்திரன், இளங்கோவன், முத்துமாணிக்கம், ராஜேந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்