கிராண்ட்ரோட்டில் ரெயில்வே மேம்பாலத்தில் திடீர் விரிசல் வாகனங்கள் செல்ல தடை
கிராண்ட்ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு பாலம் மூடப்பட்டது.
மும்பை,
கிராண்ட்ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு பாலம் மூடப்பட்டது.
பாலத்தில் திடீர் விரிசல்
மும்பையில் நேற்று முன்தினம் மழையின் போது அந்தேரியின் கிழக்கு, மேற்கு பகுதியை இணைக்கும் வகையில் அமைந்துள்ள கோகலே ரெயில்வே மேம்பாலத்தின் நடைமேம்பாலம் இடிந்தது. இதன் காரணமாக அந்த மேம்பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில், கிராண்ட்ரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
கிராண்ட் ரோடு மேற்கு மற்றும் நானா சவுக் பகுதியை இணைக்கும் வகையில் பிரேரே என்ற பாலம் உள்ளது. இந்த பாலத்தில் தான் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. நேற்று முன்தினம் இரவு 11.10 மணியளவில் விரிசல் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனங்கள் செல்ல தடை
இதை தொடர்ந்து, அந்த பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உடனடியாக பாலம் மூடப்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக போக்குவரத்து போலீசார் பாலத்தின் குறுக்கே தடுப்புகள் வைத்தனர்.
மேலும் வாகனங்கள் அனைத்தும் அங்குள்ள கென்னடி பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டன.
விரிசல் ஏற்பட்ட பாலம் மும்பை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ளது. இதுபற்றி மாநகராட்சி என்ஜினீயர் ஒருவர் கூறுகையில், ‘‘பாலத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பாலத்தை மீண்டும் திறப்பது பற்றி தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது’’ என்றார்.
இதற்கிடையே இரண்டு பாலங்கள் மூடப்பட்டதால் மேற்கு விரைவு சாலையில் நேற்று கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.