வெட்டுவாணம் எல்லையம்மன்கோவிலில் தெப்பக்குளம் சுத்தப்படுத்த வேண்டும்

வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் பக்தர்கள் நீராடும் தெப்பக்குளம் அசுத்தமாக உள்ளதால் ஆடிப்பெருவிழா தொடங்குவதற்குள் அதனை போர்க்கால அடிப்படையில் சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2018-07-05 00:00 GMT
அணைக்கட்டு,

பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவாணத்தில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இங்கு பக்தர்கள் நீராடுவதற்கு கோவிலின் எதிரில் தெப்பகுளம் உள்ளது. அந்த குளத்தில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதை பக்தர்கள் புனிதமாக கருதுகின்றனர். மேலும் முடிகாணிக்கை செலுத்துபவர்களும் இங்குதான் நீராடுகின்றனர். தற்போது தெப்பக்குளத்தில் தேங்கிய தண்ணீர் அசுத்தமாக காணப்படுகிறது. இந்த தண்ணீரில் பூமாலை மற்றும் பாலிதீன் பைகள் மிதக்கின்றன. இவற்றை உடனுக்குடன் அகற்றாததால் பூக்கள் அழுகி விடுகின்றன. இதனால் குளத்தில் உள்ள தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

அதுமட்டுமல்லாமல் மழைபெய்யும்போது தெருக்களில் உள்ள குப்பைகளும் அடித்து வரப்பட்டு தெப்பக்குளத்தில் சேருகிறது. இவற்றை அகற்றாததால் தண்ணீர், பாசிகள் படிந்த நிலையில் பச்சைநிறமாக மாறியுள்ளது.

இந்த நிலையில் ஜூலை மாதம் 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆடிப்பெருவிழா தொடங்க உள்ளது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள். நேர்த்திக்கடன் செலுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியபின் குளத்தில் நீராடுவார்கள். அவர்கள் இந்த அசுத்த நீரில் குளித்தால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையே அதிகமாக இருக்கும். எனவே வருமானம் அதிகமாக உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையின் ஒரு பகுதியை வைத்தே கோவில் குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் அசுத்தமான தண்ணீரை வெளியேற்றாமல் அதிகாரிகள் உள்ளனர். எனவே ஆடிப்பெருவிழா தொடங்குவதற்கு முன் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குளத்தில் உள்ள கழிவுகளுடன் அசுத்தமான தண்ணீரை வெளியேற்றிவிட்டு புதிய தண்ணீரை நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தெப்பக்குளத்தில் பக்தர்களால் போடப்படும் மாலைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்