நவிமும்பை நில மோசடி புகாரில் இருந்து முதல்-மந்திரி பட்னாவிஸ் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் சிவசேனா வலியுறுத்தல்

நவிமும்பை நில மோசடி புகாரில் இருந்து முதல்-மந்திரி பட்னாவிஸ் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

Update: 2018-07-04 22:30 GMT
மும்பை, 

நவிமும்பை நில மோசடி புகாரில் இருந்து முதல்-மந்திரி பட்னாவிஸ் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

நில மோசடி குற்றச்சாட்டு

நவிமும்பை கார்கர் பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக ரூ.1,767 கோடி மோசடி நடைபெற்று இருப்பதாகவும், முதல்-மந்திரி பட்னாவிசுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியது.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் ஆளும் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா அதன் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னாவில்’ கூறியிருப்பதாவது:-

ஏக்நாத் கட்சே...

முதல்-மந்திரி பட்னாவிஸ் வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தில் நம்பிக்கை உடையவர் என்பதால், முன்னாள் வருவாய் மந்திரி ஏக்நாத் கட்சே(பா.ஜனதா) நிலம் மோசடி தொடர்பான புகாரில் சிக்கியபோது கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் பதவி விலகினார். இந்தநிலையில் கடந்த மே மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏக்நாத் கட்சேயின் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்தனர். இதனால் முதல்-மந்திரி பட்னாவிஸ், ஏக்நாத் கட்சேக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்க வேண்டும் அல்லது முதல்-மந்திரி தன் மீதான புகாரில் இருந்து குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு ஊழல்களில் பங்கெடுப்பதும், பின்னர் அதனை மறுப்பதுமாக இருந்தது.

தற்போது முதல்-மந்திரி பட்னாவிசும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். காங்கிரசின் குற்றச்சாட்டுகளை குழந்தைத்தனமானது எனவும், விரக்தியில் பழிசுமத்துவதாகவும் முதல்-மந்திரி பட்னாவிஸ் கூறுகிறார். ஆனால் நவிமும்பை நில மோசடி தொடர்பான அறிக்கைகள் முதல்-மந்திரிக்கு இதில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவிக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்