அரியூரில் ரெயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

அரியூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி ஓராண்டாக முடங்கி கிடந்த நிலையில் அதனை கலெக்டர் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

Update: 2018-07-04 23:45 GMT
வேலூர்,

வேலூர் தொரப்பாடியில் இருந்து அரியூர் வரை 689 மீட்டர் தூரத்துக்கு ரூ.15 கோடியே 91 லட்சம் மதிப்பில் ரெயில்வே மேம்பால பணிகள் கடந்தாண்டு தொடங்கியது. இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டது. மேம்பாலத்தின் கீழ்பகுதியில் அணுகுசாலை அமைப்பது உள்பட பல்வேறு பணிகள் தற்போது நடந்து வருகிறது.

ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்கி ஓராண்டிற்கு மேலாகியும் முடிவடையாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் ஸ்ரீபுரம், ஊசூர், அணைக்கட்டு வழியாக வேலூரிலிருந்து செல்ல வேண்டிய பஸ்கள் மற்றும் வாகனங்கள் சித்தேரி வழியாக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் நேர விரயமும், எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது.

ரெயில்வே மேம்பாலம் அமைத்தால் இந்த விரயம் இருக்காது. எனவே முடங்கி கிடக்கும் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அரியூர் ரெயில்வே கேட் மேம்பால பணிகளை கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அணுகுசாலை அமைப்பது குறித்தும், இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கலெக்டர் ராமன், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதேபோன்று வேலூர் கஸ்பா கன்டோன்மெண்ட் ரெயில் நிலையப்பகுதியில் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.17 கோடியே 91 லட்சம் மதிப்பில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையும் கலெக்டர் ராமன் பார்வையிட்டு, விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்