ஸ்டான்லி மருத்துவமனை அருகே நடந்த வாலிபர் கொலையில் பெண் உள்பட 4 பேர் கைது
ஸ்டான்லி மருத்துவமனை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மலேசிய கள்ளக்காதலி மற்றும் அவருடைய கணவரை மலேசிய போலீஸ் உதவியுடன் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருவொற்றியூர்
சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகே உள்ள சுரங்கப்பாதையில் கடந்த மே மாதம் 15-ந் தேதி வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். விசாரணையில் அவர், திருவாரூர் அருகே உள்ள மேல்பாடி பகுதியை சேர்ந்த விஜயராகவன்(வயது 32) என்பது தெரியவந்தது.
இது குறித்து ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் தலைமையில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். போலீஸ் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி விஜயராகவன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இந்தநிலையில் இந்த கொலை தொடர்பாக காசிமேடு விநாயகபுரத்தை சேர்ந்த செந்தில்சிவா(42) மற்றும் அவருடைய நண்பர்களான சார்லஸ்(38), முத்துகுமரன்(32) மற்றும் திருச்சியை சேர்ந்த சுதா(45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து கைதான செந்தில் சிவா, போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
கொலை செய்யப்பட்ட விஜயராகவன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் பூக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு மதுபான கடை நடத்தி வரும் ரவி என்பவருடைய மனைவி நிர்மலா(34) என்பவருடன் விஜயராகவனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு விஜயராகவன், தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். பின்னர் அவர், திருச்சியில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை செய்து வந்தார். இதை அறிந்த நிர்மலா, அடிக்கடி திருச்சி வந்து அங்குள்ள சுதா என்பவரது வீட்டில் தங்கி, விஜயராகவனுடன் உல்லாசமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் விஜயராகவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் இருக்கும் புகைப்படத்தை ‘வாட்ஸ்-அப்’ மூலம் நிர்மலாவுக்கு அனுப்பி வைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நிர்மலா, இது குறித்து தனது கணவரிடம் கூறி விஜயராகவனை தீர்த்து கட்டினால் உங்களுக்கு உண்மையாக இருப்பேன் என்று உறுதி அளித்தார்.
ஏற்கனவே நான் மலேசியாவில் இருந்தபோது என்னுடன் ரவிக்கு பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அந்த பழக்கத்தை வைத்து அவர், என்னிடம் விஜயராகவனை கொலை செய்ய ரூ. 1 லட்சம் தருவதாக பேரம் பேசினார். அதற்கு நானும் ஒப்புக்கொண்டேன்.
இதனையடுத்து நிர்மலா, மலேசியாவில் இருந்து திருச்சியில் உள்ள சுதாவின் வீட்டிற்கு வந்தார். அங்கு விஜயராகவனை வரவழைத்தார். பின்னர் விஜயராகவனை, கடந்த மே மாதம் 13-ந்தேதி இரவு சென்னை அழைத்து வந்து, காசிமேடு சூரியநாராயணா தெருவில் உள்ள ஒரு பூங்காவில் வைத்து அவருக்கு அளவுக்கதிகமாக மது ஊற்றிக்கொடுத்தோம்.
பின்னர் போதையில் இருந்த விஜயராகவனை, காலில் வெட்டினோம். இதில் அவர் இறந்து போனார். பின்னர் ஸ்டான்லி மருத்துவமனை சுரங்கப்பாதை அருகே அவரது உடலை போட்டுவிட்டு சென்றுவிட்டோம். மறுநாள் நிர்மலா மலேசியா சென்று விட்டார்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளான நிர்மலா மற்றும் அவருடைய கணவர் ரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து மலேசிய போலீசார் உதவியுடன் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.