ரூ.52.19 கோடியில் மாம்பழத்திற்கான பிரத்யேக முதன்மை பதப்படுத்தும் நிலையம் அதிகாரிகள் ஆய்வு

போச்சம்பள்ளியில் ரூ.52.19 கோடியில் மாம்பழத்திற்கான பிரத்யேக முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

Update: 2018-07-04 22:45 GMT
மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழ பயிர்கள் சராசரியாக 50 ஆயிரத்து 441 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காய்கறி மற்றும் பழங்கள் வீணாவதை தடுக்கவும், விவசாயிகள் அதிக லாபம் பெறும் நோக்கிலும், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், வியாபாரிகளுக்கு அனைத்து கட்டுமான வசதிகளுடன் கூடிய காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர அழுகும் பொருட்களுக்கான வினியோக தொடர் மேலாண்மை திட்டம், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.136.18 கோடி மதிப்பில் கிருஷ்ணகிரி, ஆலப்பட்டி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, குந்தாரப்பள்ளி, காமன்தொட்டி, ஓசூர், தட்டிகானப்பள்ளி, தேன்கனிக்கோட்டை மற்றும் ராயக்கோட்டை உள்ளிட்ட 10 இடங்களில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் கட்டுப்பாடு, வளிமண்டல சேமிப்பு கிடங்கு, காய்கறி காற்று உலர்த்தி, தரம்பிரிப்பு, தொகுப்பு கட்டிடம், எடைமேடை, காய்கறி சேகரிப்பு ஊர்தி, ஏல மையம், கணினி அலுவலர் தங்கும் விடுதி, நடைமேடை நைட்ரஜன் தொகுப்பு எந்திரம் ஆகிய கட்டமைப்புகளுடன் அமைய உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் போச்சம்பள்ளியில் மாம்பழத்திற்கென்று பிரத்யேக முதன்மை பதப்படுத்தும் நிலையம் ரூ.52.19 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஏற்றுமதி உயர் தொழில்நுட்பங்களுடன் அமைய உள்ளது. இந்த நிலையில் எந்திரங்கள் அமைய உள்ள இடங்களை அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய தென்மண்டல அதிகாரிகள் நேரு, சொக்கலிங்கம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இணை இயக்குனர் நிஜாம்முதீன், துணை இயக்குனர் ராமமூர்த்தி, உதவி இயக்குனர் தேனமுதா, வேளாண்மை அலுவலர் வானதி, உதவி வேளாண் அலுவலர் குமார், போச்சம்பள்ளி மா உற்பத்தி சங்க நிர்வாகிகள் சிற்றரசு, செந்தில் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்