இளவரசன் நினைவுநாளையொட்டி தடையை மீறி ஊர்வலமாக சென்ற 42 பேர் கைது

இளவரசன் நினைவு நாளையொட்டி தர்மபுரியில் தடையை மீறி ஊர்வலமாக சென்ற தலித் விடுதலை கட்சியை சேர்ந்த 42 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-04 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரியை அடுத்த நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன். இவருடைய காதல் திருமண விவகாரத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி இளவரசன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இளவரசனின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவருடைய சமாதி உள்ள நத்தம்காலனி பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இளவரசனின் குடும்பத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இளவரசன் நினைவு நாளையொட்டி தலித் விடுதலை கட்சியின் பொதுச்செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று மதியம் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக நாயக்கன்கொட்டாய் பகுதிக்கு புறப்பட்டனர். ஊர்வலத்திற்கு போலீஸ் அனுமதி வழங்காததால் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டுகள் காந்தி, அன்புராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் செங்கோட்டையன் கூறுகையில், இளவரசனின் நினைவுநாளில் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த எங்கள் கட்சி சார்பில் அனுமதி கேட்டு போலீசாரிடம் கடிதம் கொடுத்திருந்தோம். ஆனால் அந்த மனுவை பரிசீலிக்கவில்லை. 144 தடைஉத்தரவு இல்லாத நிலையில் அஞ்சலி செலுத்த போலீஸ் அனுமதி தேவையில்லை. எனவே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்த அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. அமைதியான முறையில் எங்களை அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி ஊர்வலமாக சென்றதாக செங்கோட்டையன் உள்பட அந்த கட்சியை சேர்ந்த 42 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்