தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
டி.கல்லுப்பட்டி, சோழவந்தான் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் அரசால் தடைசெய்யப்பட்ட 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பேரூராட்சி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்டது. கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின் பேரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலெட்சுமி ஆலோசனையின் பேரில் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் சின்னச்சாமிபாண்டியன் தலைமையில் பணியாளர்கள், இளநிலை உதவியாளர் பால கிருஷ்ணன் முத்தழகு, ஜெய முருகன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கொண்ட குழுவினர் வணிக நிறுவனங்களான டீக்கடைகள், பெட்டி கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள், சாலையோர வியாபார கடைகள் ஆகிய இடங்களில் சோதனை செய்தனர்.
அதில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டீ கப்புகள், கேரி பேக்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என 30 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் துணிப்பைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டுமென்று வணிகர் களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவுரை கூறினார்கள்.
இதுகுறித்து செயல் அலுவலர் சின்னச்சாமிபாண்டியன் கூறியதாவது:- அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. பயன்படுத்துவோர் மீது அபராத தொகை விதிக்கப்படும். டி.கல்லுப்பட்டி பேரூராட்சி முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத பகுதியாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
சோழவந்தானில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. சோழவந்தான் கடைவீதி, பஸ்நிலையம், மார்க்கெட் பகுதி, வட்ட பிள்ளையார் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகள், திருமண மண்டபங்கள், வங்கிகள், பள்ளிக் கூடங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
சோழவந்தான் பகுதி முழுவதும் உள்ள அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் திடீர் சோதனை நடத்தியதில் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு இனி பயன்படுத்தக் கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது இதில் இளநிலை உதவியாளர் முத்துகுமரன், சிவக்குமார் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.