புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருகை பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என கலெக்டர் பேட்டி

பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து லாரிகள் மூலம் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தஞ்சைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த எந்திரங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.;

Update:2018-07-05 04:15 IST
தஞ்சாவூர்,

பெங்களூரு பெல் நிறுவனத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட எம்.3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகள் மூலம் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. இந்த எந்திரங்கள் கலெக்டர் அண்ணாதுரை, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார்கள் அருணகிரி, ராமலிங்கம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது. பின்னர் அனைத்து எந்திரங்களும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்திற்கு புதிய எம்.3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 5,500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 3,490 கட்டுப்பாட்டு கருவிகளும் பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து லாரிகள் மூலம் எடுத்து வரப்பட்டு அவைகள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி அடுத்த ஆண்டு(2019) நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும். பழைய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தனியாக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பழைய எம்.2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை காட்டிலும், புதிய எம்.3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எளிதாக இயக்கும் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் பொருட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரெயில் முறையிலான எண்களை கொண்ட அச்சுகளை கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்