விவசாய கடன் தள்ளுபடிக்காக ஒரு ஆண்டு சம்பளத்தை கொடுக்கும் மண்டியா மாவட்ட பஞ்சாயத்து தலைவி
விவசாய கடன் தள்ளுபடிக்காக ஒரு ஆண்டு சம்பளத்தை கொடுப்பதாக மண்டியா மாவட்ட பஞ்சாயத்து தலைவி நாகரத்னா அறிவித்துள்ளார்.
மண்டியா,
விவசாய கடன் தள்ளுபடிக்காக ஒரு ஆண்டு சம்பளத்தை கொடுப்பதாக மண்டியா மாவட்ட பஞ்சாயத்து தலைவி நாகரத்னா அறிவித்துள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடிகர்நாடக முதல்–மந்திரியாக பதவி ஏற்றால், 24 மணி நேரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி தேர்தல் பிரசாரத்தின் போது அறிவித்தார். சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் காங்கிரசுடன் கைகோர்த்து ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைத்துள்ளது. கூட்டணி ஆட்சியின் முதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றுள்ளார். அவர் பதவி ஏற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் அவர் தான் கூறிய படி இன்னும் விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கு பதில் அளித்த குமாரசாமி, நான் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தால் முதல்–மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வேன் என்று கூறினேன். தற்போது கூட்டணி ஆட்சி நடந்து வருவதால், விவசாய கடன் தள்ளுபடி பற்றி காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்று தெரிவித்தார். மேலும் இன்று (5–ந்தேதி) சட்டசபையில் குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில், விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு ஆண்டு சம்பளத்தை கொடுக்கும் மாவட்ட பஞ்சாயத்து தலைவிஇந்த நிலையில் மண்டியா மாவட்ட பஞ்சாயத்து தலைவி (ஜனதாதளம் (எஸ்)) நாகரத்னா, விவசாய கடன் தள்ளுபடிக்காக தனது ஒரு ஆண்டு சம்பளம், படி ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளார். அதாவது கடந்த ஒரு ஆண்டு தனது சம்பளம், படிகளை சேர்த்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை விவசாய கடன் தள்ளுபடிக்காக முதல்–மந்திரி குமாரசாமிக்கு அனுப்பி வைக்கப்போவதாக அவர் நிருபர்களிடம் கூறினார். மேலும் அதற்கான காசோலையை அவர் காண்பித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இதேப் போல் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த மண்டியா மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் விவசாய கடன் தள்ளுபடிக்காக தங்களது ஒரு ஆண்டு சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளனர் என்றார். அதன் பின்னர் அந்த காசோலையை முதல்–மந்திரியின் அலுவலகத்திற்கு அவர் அனுப்பிவைத்தார்.
மாநிலம் முழுவதும்...இதுகுறித்து ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் கூறுகையில், முதல்–மந்திரி குமாரசாமி விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளார். 2 தவணையாக இந்த கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியாகும். மாநிலத்தின் நிதி நிலை மோசமாக இருப்பதால், விவசாய கடன் தள்ளுபடிக்காக மாநிலம் முழுவதும் உள்ள எங்கள் கட்சியை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் ஒரு ஆண்டு சம்பளத்தை கொடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி மண்டியா மாவட்ட பஞ்சாயத்து தலைவி நாகரத்னாவும் தனது ஒரு ஆண்டு சம்பளத்தை கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார் என்றனர்.