மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து ஏற்படும் வளர்ச்சி தேவை இல்லை தொல்.திருமாவளவன் பேச்சு
மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அதனால் ஏற்படும் வளர்ச்சி தேவை இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால் 15 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிகிறது.
மக்கள் கூட்டம் வன்முறையை நோக்கி செல்கிறது என்றால் அதனை கையாள சில வழிமுறைகள் உள்ளன. துப்பாக்கி சூடு நடத்த சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பவரிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். ஆனால் இது அப்படி நடக்கவில்லை. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட பச்சை படுகொலை. சம்பவத்தன்று மாவட்ட கலெக்டர் இல்லை என்பதில் உள்நோக்கம் உள்ளது.
பொதுமக்கள் கூடும் இடத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என்றால், அதற்கு மக்களை சரியாக கையாள தெரியாத போலீஸ் அதிகாரிகளே காரணம். வேதாந்தா நிறுவனம் பா.ஜனதாவிற்கு பல கோடி தேர்தல் நிதியாக கொடுத்து உள்ளது. அதற்கு நன்றிக்கடனாக தூத்துக்குடியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. மோடி அரசின் நோக்கம் அனில் அகர்வாலை காப்பாற்றுவதும், கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றுவதும் தான். மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து, அதனால் வரும் வளர்ச்சி தேவை இல்லை. ஆட்சியாளர்கள் இதுபோன்ற செயல் களை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ‘அரசியல் அமைப்பு சட்டம் போராட்டம் நடத்த உரிமை அளித்து உள்ளது. இதனை யாரும் தடுக்க முடியாது. பொதுமக்களுக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு என்பது ஒரு படுகொலை’ என்றார்.
கூட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் அகமது இக்பால் செய்து இருந்தார்.