ஒரு சமூகத்தை உடைத்தார் சித்தராமையா பற்றிய பேச்சால் மேல்–சபையில் கூச்சல்–குழப்பம்
ஒரு சமூகத்தை உடைத்தார் என சித்தராமையா பற்றி பேசியதால் மேல்–சபையில் கூச்சல்–குழப்பம் உண்டானது.
பெங்களூரு,
ஒரு சமூகத்தை உடைத்தார் என சித்தராமையா பற்றி பேசியதால் மேல்–சபையில் கூச்சல்–குழப்பம் உண்டானது.
சமூகத்தை உடைத்தார்கர்நாடக மேல்–சபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா உறுப்பினர் லெகர்சிங் பேசுகையில், “மதத்தின் பெயரில் சித்தராமையா ஒரு சமூகத்தை உடைத்தார். அவருக்கு சாமுண்டீஸ்வரி தொகுதியில் மந்திரி ஜி.டி.தேவேகவுடா தக்க பாடம் புகட்டினார்“ என்றார்.
லெகர்சிங்கின் இந்த கருத்துக்கு மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ஆர்.வி.தேஷ்பாண்டே உள்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. சிறிது நேரம் கூச்சல்–குழப்பமும் நீடித்தது. அப்போது மேல்–சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, யாருடைய பேச்சையும் அவை குறிப்பில் சேர்க்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.
சிறப்பான ஆட்சி நிர்வாகம்அப்போது மேல்–சபை தலைவரின் அனுமதியுடன் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேசினார். அவர் கூறுகையில், “இந்த சபையின் உறுப்பினராக இல்லாதவர்(சித்தராமையா) பற்றி இங்கே பேசுவது சரியல்ல. மாநிலத்தில் 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை நடத்தியவர் சித்தராமையா. அவரை பற்றி தனிப்பட்ட முறையில் பேசி புகழை கெடுக்க முயற்சி செய்வது சரியல்ல. அவரை பற்றி பேச லெகர்சிங்குக்கு என்ன தகுதி உள்ளது?. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட தேர்தலில் தோல்வி அடைந்தார். அவருடைய புகழ் குறைந்துவிட்டதா?“ என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, “முன்னாள் முதல்–மந்திரி பற்றி மனதுக்கு வந்தபடி பேசுவது சரியல்ல. உறுப்பினர்கள் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும் என்று மேல்–சபை தலைவர் உத்தரவிட வேண்டும்“ என்றார். சித்தராமையா பற்றி இவ்வாறு பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது உயர்கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவேகவுடா எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.