“மக்களை கட்டாயப்படுத்தி திட்டங்களை திணிக்க நினைத்தால் ஏற்க மாட்டோம்” ஜி.கே.வாசன் பேட்டி

‘மக்களை கட்டாயப்படுத்தி எந்த திட்டங்களை திணிக்க நினைத்தாலும் ஏற்க மாட்டோம்’ என்று ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2018-07-04 23:00 GMT
கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வருகை தந்தார். பின்னர் அவர், அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஜி.கே.வாசனிடம், பொதுமக்கள் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களை கட்டாயப்படுத்தி எந்த திட்டங்களை திணிக்க நினைத்தாலும் ஏற்க மாட்டோம். விவசாயம் மற்றும் சிறு-குறு தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படும் சூழல் வந்தால் எந்த திட்டங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வருகிற 8-ந் தேதி சேலம் சென்று 8 வழி சாலை பிரச்சினை சம்பந்தமாக விவசாயிகளை சந்தித்து உண்மை நிலையை அறிய உள்ளேன்.

காவிரி ஆணைய கூட்டத்தில் சரியாக தண்ணீர் தர கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை பொறுமை காத்ததற்கு கிடைத்த வெற்றியாகும். இதனை கர்நாடக அரசு பின்பற்றி கூட்டாட்சி தத்துவத்திற்கு எடுத்து காட்டாக செயல்படும் என நம்புகிறோம். தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு உள்ளதால் தற்போது கட்டுமான பணிகள் பல இடங்களில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே உடனடியாக மணல் விற்பனையை முறையாக கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்