சட்டசபைக்கு மந்திரிகள் வராததால் சபாநாயகர் கடும் கோபம் சகித்துக்கொள்ள மாட்டேன் என எச்சரிக்கை

சட்டசபைக்கு மந்திரிகள் வராததால் சபாநாயகர் கடும் கோபம் அடைந்தார். இதை சகித்துக்கொள்ள மாட்டேன் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.;

Update: 2018-07-04 21:30 GMT

பெங்களூரு,

சட்டசபைக்கு மந்திரிகள் வராததால் சபாநாயகர் கடும் கோபம் அடைந்தார். இதை சகித்துக்கொள்ள மாட்டேன் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சபாநாயகர் கடும் கோபம்

கர்நாடக சட்டசபையின் 3–வது நாள் கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. அப்போது பெரும்பாலான மந்திரிகளின் இருக்கைகள் காலியாக இருந்தன. இதை கவனித்த சபாநாயகர் ரமேஷ்குமார், “சபையில் இன்று (அதாவது நேற்று) 13 மந்திரிகள் இருக்க வேண்டும். ஆனால் 6 மந்திரிகள் தான் உள்ளனர். மற்றவர்கள் எங்கே?. மந்திரிகள் இவ்வாறு அலட்சியமாக இருந்தால் எப்படி?. 15 நிமிடங்கள் காலஅவகாசம் தருகிறேன். அனைத்து மந்திரிகளும் சபைக்கு வர வேண்டும். சபைக்கு வருவதை விட மந்திரிகளுக்கு வேறு என்ன பெரிய வேலை உள்ளது?, மந்திரிகள் இவ்வாறு அலட்சியமாக இருப்பதை நான் சகித்துக்கொள்ள மாட்டேன்“ என்று பேசி கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

சபாநாயகரின் இந்த பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய பா.ஜனதா உறுப்பினர் அரக ஞானேந்திரா, “மந்திரிகள் இல்லை. அதிகாரிகளும் இல்லை. நாங்கள் இருக்கைகளை பார்த்து பேச வேண்டுமா?“ என்றார்.

அப்போது மீண்டும் பேசிய சபாநாயகர், “அதிகாரிகள் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்வதை உறுதி செய்யுமாறு முதல்–மந்திரியிடம் கூறினேன். அதனால் அதிகாரிகள் உள்ளனர். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்“ என்றார்.

மென்மையாக இருக்கிறேன்

அப்போது பா.ஜனதா உறுப்பினர் ராஜீவ் குறுக்கிட்டு, “அதிகாரிகள் பற்றி பேசும்போது தாங்கள் மென்மையாக பேசுகிறீர்கள். மந்திரிகள் குறித்து பேசுகையில் வன்மையாக இருக்கிறீர்களே ஏன்?“ என்றார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர், “நான் மென்மையாகவும் இல்லை. வன்மையாகவும் இல்லை. நடுநிலையாக இருக்கிறேன். நீங்கள் பேசும்போது வன்மையாகிறேன். ஈசுவரப்பா பேசுகையில் மென்மையாக இருக்கிறேன்“ என்றார்.

மேலும் செய்திகள்