தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சாயப்பட்டறை தொழிலாளி சாவு
சென்னிமலை அருகே, தூங்கிக்கொண்டு இருந்த சாயப்பட்டறை தொழிலாளி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
சென்னிமலை,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள கீழ்பாகம் ஊத்துகரையை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு மாரியம்மாள் என்ற மகளும், லோகேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். பெருமாள் ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே காளிக்காவலசில் உள்ள தனியாருக்கு சொந்தமான சாயப்பட்டறையில் கடந்த 6 மாதங்களாக தங்கியிருந்து அங்கேயே வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு அங்குள்ள தண்ணீர் தொட்டி மீது படுத்து தூங்கினார். அவருடன் சாயப்பட்டறையில் வேலை பார்க்கும் சுப்பிரமணி, பழனிச்சாமி, பெரிய பெருமாள் ஆகிய தொழிலாளர்களும் தண்ணீர் தொட்டி மீது ஆங்காங்கே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது பெருமாள் எதிர்பாராத விதமாக 15 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துவிட்டார். அதில் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்தது.
இதில் தண்ணீரில் மூழ்கி பெருமாள் இறந்தார். மற்ற தொழிலாளர்கள் காலை விழித்து பார்த்தபோது பெருமாள் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரை தேடினார்கள். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் பெருமாள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் சென்னிமலை போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி பெருமாளின் உடலை மீட்டனர். இதைத்தொடர்ந்து பெருமாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.