தேனியில் பரபரப்பு: பல்லி விழுந்த தண்ணீர் குடித்த 7 மாணவர்கள் மயக்கம், மருத்துவமனையில் அனுமதி
தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகில் உள்ள ஓட்டலில், பல்லி விழுந்த தண்ணீர் குடித்த 7 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தேனி,
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள ஓட்டல்களில் சாப்பிடுவது வழக்கம். அதன்படி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஒரு ஓட்டலில் மாணவர்கள் சிலர் நேற்று காலையில் உணவு சாப்பிட்டுள்ளனர்.
இதில் தோசை சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்த ஒக்கரைப்பட்டியை சேர்ந்த பிரசாத் (வயது 18), நாச்சியார்புரத்தை சேர்ந்த எஸ்.விஜய் (18), பள்ளப்பட்டியை சேர்ந்த சென்றாய மருது (18), சங்கராபுரத்தை சேர்ந்த வல்லரசு (18), முத்துலாபுரத்தை சேர்ந்த எம்.விஜய் (18), மேல்மங்கலத்தை சேர்ந்த முகேஷ் (19), கண்டமனூரை சேர்ந்த சிங்கத்துரை (18) ஆகியோர் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு பட்டயப்படிப்பு படித்து வருகின்றனர். குமட்டல், தலை சுற்றலைத் தொடர்ந்து அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவர்கள் 7 பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்த போது அந்த தண்ணீர் அண்டாவுக்குள் பல்லி விழுந்து கிடந்ததாகவும் அதை குடித்ததால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறினர். இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகுணா தலைமையில், தேனி உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ், ஆண்டிப்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்ராஜ்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அந்த ஓட்டலில் சுகாதாரக் குறைபாடு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த ஓட்டல் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர். 7 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ஓட்டலுக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களிடம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.