ஆண்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? கலெக்டர் திடீர் ஆய்வு

ஆண்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-07-04 00:30 GMT
ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 6 மணியளவில் கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2, 5 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் நடந்து சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

இதையடுத்து 8-வது வார்டில் உள்ள காமராஜர்நகர் பகுதியில் ஆய்வு நடத்தியபோது சாக்கடை கழிவுநீர் அதிகளவில் தேங்கியிருந்தது. அதனை அப்புறப்படுத்தி, இனிவரும் காலங்களில் இதுபோன்ற கழிவுநீர் தேங்காதவாறு வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து 2-வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் காலனி பகுதிக்கு சென்று கலெக்டர் ஆய்வு நடத்தினார். அப்போது அந்த பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கண்டறிய, அந்த பகுதிகளில் வினியோகம் செய்யப்படும் தண்ணீரை ஒரு பாட்டிலில் பிடித்து ஆய்வுக்காக கொண்டு சென்றார்.

அதே பகுதியில் பயன்பாட்டில் இருக்கும் கிணற்றை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். அந்த கிணற்றை தூர்வார தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி பேரூராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 5-வது வார்டில் உள்ள மயானம் புதர்மண்டி, தண்ணீர் வசதியின்றி இருப்பதாக மக்கள் மனு கொடுத்தனர். அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் கருப்பையா, பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்